Sunday, 11 September 2016

திருவள்ளுவர் திருக்குறளை எழுதியதற்கான மையக்கரு என்ன?


உலகில் உள்ள படைப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கிறது. அதேபோல எழுத்தாளன் என்பவர்களுக்கும் தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. இதை யாராலும் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. தங்களுடைய கட்டுப்பாட்டால் அதை மறைக்க முயற்சி செய்தாலும். அதையும் மீறி ஏதாவது ஒரு இடத்தில் தன்னை வெளிப்படுத்தியே தீருவார்கள். இதுதான் படைப்பாளர்களுக்கான இலக்கணம். இந்த இலக்கண விதியை யாராலும் மீற முடியாது. அப்படி நான் இந்த விதியை மீறிவிட்டேன் என்று யாராவது சொன்னால் அவர்கள் படைப்பாளர்களாக இருக்க முடியாது. அவர்களுடைய படைப்புக்கள் அரங்கேறவும் முடியாது.
எந்த ஒரு படைப்பாளனாக இருந்தாலும் தன்னுடைய முதல் படைப்பில் தனது அனுபவத்தையோ, அல்லது தனது கண் முன்னாள் நடந்த ஒரு சம்பவத்தையோ மையமாக வைத்துதான் அந்த படைப்பை இயற்றுவார்கள். அப்படி ஒரு படைப்பின் மையமாக இருக்கக் கூடிய அந்த சம்பவம் என்பது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருக்கும். அந்த சம்பவத்தை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ தங்களுடைய படைப்பில் புகுத்தியிருப்பார்கள்.
திருவள்ளுவரும் ஒரு படைப்பாளர்தான் என்பதை நாங்கள் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. அப்படியானால், திருவள்ளுவர் தனது படைப்பில் எதை மையக் கருவாக வெளிப்படுத்தியிருக்கிறார்? தன்னை எப்படி அடையாளப்படுத்தி இருக்கிறார்? இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்கள் அனைத்தும் அறிவுரைகள்தான் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால், இந்த அறிவுரைகள் அனைத்தும் யாரையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டதாக இல்லை. யாரோ, யாருக்கோ சொன்னதுபோல இருக்கிறது...
ஒரு சமுதாயத்தைப் பார்த்து, நீ எப்படி செயல்பட வேண்டும் என்று திருவள்ளுவர் சொன்னதில்லை. இப்படியெல்லாம் செயல்படுவதுதான் நல்ல சமுதாயம் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு நாட்டின் மன்னனைப் பார்த்து நீ இப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லவில்லை. ஒரு நாட்டிற்கு மன்னனாக வேண்டுமானால் அவனுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு உயர்ந்த குடிப்பிறப்பை உடைய மக்களைப் பார்த்து நீ இப்படி இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லவில்லை. உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறார்.
ஒரு (மது+போதை) குடிகாரனைப் பார்த்து நீ குடிக்காதே என்று திருவள்ளுவர் அறிவுரை சொல்லவில்லை. குடிக்கு அடிமையாகக் கூடியவன் எப்படியெல்லாம் அவமானப்படுகிறான் என்பதைத்தான் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்?
இப்படி யாருக்கும், எதையும் நேரடியாக சொல்லாமல் அதற்கென்று ஒரு தனிப்பட்ட பாணியை (மையாக கரு) கடைப்பிடித்து அதன் அடிப்படையிலேயே தன்னுடைய அனைத்து கருத்துக்களையும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் திருவள்ளுவருக்கு ஏன் ஏற்பட்டது?
உயர்ந்த சிந்தனைகளை உலக மக்களுக்கு அறிவுரையாக சொல்ல வேண்டும் என்று நினைத்த திருவள்ளுவர் தன்னைப்பற்றிய விவரங்களை ஏன் மறைத்துக்கொள்ள வேண்டும்? தான் யார் என்பதையோ, தனது பெற்றோர்கள் யார் என்பதையோ குறிப்பிடாமல் இருந்தது ஏன்? திருவள்ளுவரின் படைப்பில் கையாளப்பட்ட மையக் கரு எது? அல்லது ஒரு படைப்பாளனுக்கே உரித்தான வெளிப்படுத்துதலில் தன்னை திருவள்ளுவர் எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்? என்பது பற்றிய ஆராய்ச்சியை சில காலங்களாக நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். அதில் சில உண்மைகளும் ஒற்றுமைகளும் கிடைத்திருக்கிறது...
திருவள்ளுவரைப் பற்றிய ஆராய்ச்சியில், இன்று வரையில் திருவள்ளுவர் யார்? அவர் வாழ்ந்த காலம் என்ன? திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர்? எங்கு பிறந்தவர்? அவருடைய பெற்றோர்கள் யார்? என்பதுபற்றித்தான் ஆராய்ச்சிகள் நடந்துள்ளது. ஆனால், உலக மக்களுக்கு அறிவுரை சொல்லவேண்டும் என்றும், அதை யாருக்கோ சொல்வதுபோல பொத்தாம் பொதுவாக சொல்லவேண்டும் என்ற அவசியம் திருவள்ளுவருக்கு ஏன் வந்தது என்பதைப்பற்றி நாம் யாரும் ஆராய்ச்சி செய்யவில்லை.
ஆனால், தான் யார் என்பதை மறைக்க முயற்சித்த திருவள்ளுவர் தன்னுடைய கட்டுப்பாட்டையும் மீறி தன்னுடைய முதல் குறளிலேயே அதை சொல்லித்தான் ஆரம்பிக்கிறார்!!
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!"

இந்த இடத்தில்தான் தன்னைப்பற்றிய அடையாளத்தையும், திருக்குறள் எழுதிய மையக்கருவையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். இதைப்பற்றிய விளக்கத்தை, நடைபெற இருக்கும் "திருவள்ளுவர் உலகக் கல்வி மாநாட்டில்" வெளியிட இருக்கிறோம்"
உலக மக்கள் அனைவரும் ஒன்று சேருங்கள்! நமது திருவள்ளுவரின் வாழ்க்கை லட்சியத்தை நிறைவேற்றுவோம்!
"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்"

வாழ்க வள்ளுவம்! வளர்க மனித சமுதாயம்!!
திருவள்ளுவர் பேரவை.